எங்கும் நிறைந்தவன் இறைவன், எல்லாம் அறிந்தவன் அவன். நம் கண்ணுக்குத் அவன் தெரியாவிட்டாலும் அவனன்றி அணுவும் அசையாது. இக்கட்டான நேரத்தில் இறைவனை துணைக்கு அழைப்பது மனித இயல்பு. அழைப்பவர் குரல் கேட்டு அவன் ஓடோடி வந்துவிடுவதில்லை. அன்றும், இன்றும் என்றும் சரி- இறைவன் பிரதட்சண்யம் ஆகப்போவதில்லை. ஆனால் பிறப்பும், இருப்பும், இறப்பும் தொய்வற்ற உலக இயக்கமும் புரியாத விந்தையாக இருக்கும்வரை அவன் இருப்பதான நம்பிக்கை குறையப்போவதில்லை. அவன் இருக்கிறான், அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கி றான். அனைத்து உயிர்களையும் அவன் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறான். அனைத்து செயற்பாடுகளும் அவனது கண்காணிப்பில் நடந்தேறுகிறது என்ற நினைப்பே காலகாலமாக கடவுளோடு நம்மை பின்னி பிணைத்து வைத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத அவனை நம் கண்முன்னே கொண்டுவர நம்மவர்கள் உருவாக்கியவைதான் கோவில்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kovendan.jpg)
அத்தகைய கோவில்கள் ஒவ்வொன்றும் நமக்கும் நம் பாரதநாட்டிற்கும் கிடைத்த ஆன்ம பொக்கிஷங்கள். சோழ மன்னர்கள் உருவாக்கத் தொடங்கிய இந்த அடையாளம் பாண்டியர்களாலும் சேரர்களாலும், பல்லவர்களாலும் பரவலாக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது.
அத்தகைய ஆலயங்களில் ஒன்றே அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் கோவந்தபுத்தூர் அருள்மிகு மங்களநாயகி உடனுறை கங்காஜடேசுவரர் திருக்கோவில். கொள்ளிடம் ஆற்றுக்கு வடகரையிலுள்ள இந்த ஆலயத்தைப்போலவே மற்றொரு ஆலயம் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையிலும் உள்ளது. இரண்டுக்கும் ஒரே தலவரலாறு. இரண்டும் கோவிந்தபுத்தூர் என்ற ஊரிலேயே அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு. இப்பொழுது இந்த வடகரை ஆலயத்தை தரிசிக்கலாம் வாருங்கள்.
ஊர் மற்றும் தலச்சிறப்பு
கோவந்தபுத்தூர் என்ற இவ்வூர் அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுக்கு வடக்கில் அமைந்துள்ளது. முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தில், இவ்வூர் வடகரை ராஜேந்திர சிங்க வளநாட்டுப் பெரிய வானவன்மாதேவி சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிவாலயத்திற்கு விஜயமங்கை என்று பெயர். இதனைப்போலவே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் திருப்புறம்பியத்திலிருந்து திருவைக்காவுர் செல்லும் வழியில் மற்றொரு கோவிந்தபுத்தூர் உள்ளது. அது திரிபுவனச் சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் விக்கிரமசோழநாட்டு இன்னம்பூர் நாட்டு விஜயமங்கை என்றும், இன்னம்பூரில் கண்டெடுக்கப்பட்ட (கி.பி.1372) விஜயநகர மன்னன் கம்பண்ணரின் கல்வெட்டில் கோவந்தபுத்தூர் என்று அழைக்கப்பட்டதாகவும் இடம் பெற்றுள்ளது. இரண்டு கோவந்த புத்தூரும் இப்பொழுது கோவிந்தபுத்தூர் என்றழைக்கப்படுகிறது. தென்கரை (தஞ்சை மாவட்டம்) ஆலய ஈசன் அருள்மிகு மங்களநாயகி உடனுறை விஜயநாதர், பாசுபத அஸ்திரம் வேண்டி. தவம்செய்த மகாபாரத அர்ச்சுனனுக்கும் (விஜயன்), கோ(பசு)வுக்கும் அருள்பாலித்தமையால் ஆலயத்திற்கு விஜயமங்கை என்ற பெயர் ஏற்பட்டதாக தலவரலாறு கூறுகின்றது. வடகரை (அரியலூர் மாவட்டம்) தலத்திற்கும் (இப்பொழுது நாம் தரிசிக்கின்ற ஆலயம்) அதே தலவரலாறு கூறப் படுகின்றது. ஒரேயொரு வித்தியாசம் தஞ்சைமாவட்டத்து விஜமங்கை ஆலயம் திருநாவுக்கரசராலும் திருஞானசம்பந்தராலும் பாடப்பெற்ற தேவாரத்தலம். அரியலூர் மாவட்டத்து விஜயமங்கை ஆலயம் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலங்களில் ஒன்று. தஞ்சைமாவட்டத்து விஜயமங்கை ஆலயத்திலிருந்தே இத்தலத்தை நினைத்து திருநாவுக்கரசர் அங்கிருந்த படியே பாடியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kovendan1.jpg)
தலச் சிறப்பு
கோ (பசு) அடையாளங்காட்டிய சுயம்புலிங்கத்தை மூலவராகக்கொண்ட கோவில், சுட்ட செங்கற்களைக்கொண்டு, சுண்ணாம்பு கலந்து சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட முதற்கோவில், அனைவரையும் ஆச்சர்யப் படுத்தும்விதமாக அழகிய இறைத்திரு மேனிகளைக்கொண்ட கோவில், பாடல்பெற்ற தலங்கள் பலவற்றிலும் பூஜையின்போது தேவாரம் ஓதப்பட் டதைப்போல இக் கோவிலிலும் தேவாரப் பதிகங்கள் ஓதப்பட்ட கல்வெட்டு ஆதாரத்தைக்கொண்ட கோவில், திருஞானசம்பந்தர் பாடிய, "வாழ்க அந்தணர் வாணவர் ஆயினும்' என்னும் பாடல் மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்திலேயே கல்வெட்டில் பொறிக்கப்பட்ட கோவில், பாசுபதம் வேண்டி அர்ச்சுனன் தவம்செய்த தலங்களில் ஒன்று என்பன போன்ற சிறப்புகளுக்குரியது. இறைவன் ஸ்ரீகங்காஜடேசுவரர், இறைவி மங்களநாயகி, தீர்த்தம் அர்ச்சுன தீர்த்தம் மற்றும் கொள்ளிடம் தீர்த்தம், தலவிருட்சம் விளாமரம்.
தல வரலாறு
ஆலயம் அமைந்திருக்கும் ஊர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் வாழ்ந்தவர்கள் முற்காலத்தில் ஆநிரைகள் வளர்ப்பதை தொழிலாக கொண்டிருந்ததுடன், அவைகளிலிருந்து பெறும் பால் மற்றும் பால்பொருட்களை தலையில் சுமந்து கொள்ளிடம் ஆற்றைத் தாண்டிச்சென்று கும்பகோணம்வரை சென்று விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அதற்காக அவர்கள் பெரும் மந்தைகளாக மாடுகள் வளர்த்துவந்தனர்.
அந்த மாடுகள் மேய்ந்த வில்வவனமான பகுதி யில் பன்னெடுங்காலத் திற்குமுன் ஐக்கியமாகி இருந்த சிவனார் தன்னை வெளியுலகிற்கு காட்சிப்படுத்துமாறு தெய்வீக பசுவான காம தேனுவிடம் கட்டளையிட, அதை சிரமேற்ற காமதேனு அப்பகுதிக்கு வந்து மேய்ந்துக்கொண்டிருந்த ஒரு பசுவின் உடலுக்குள் புகுந்து வில்வ வனத்தில் சிவனார் இருந்த புற்றுக்குச் சென்று அவர் திருமேனியை குளிர்விக்கும் விதமாக தன் மடியிலிருந்த பாலை சொரிந்து பாலாபிஷேகம் செய்தது. பசுவின் செயலை தொடர்ந்து கண்ணுற்ற இடையன் ஒருநாள் மாட்டை ஒட்டிவிட்டு, தன் கையிலிருந்த கம்பால் அந்த புற்றைத் தோண்டிப்பார்க்க அதற்குள் ஒரு சிவலிங்கம் புதையுண்டு இருப்பதைக் கண்டான். இது விஷயத்தை ஓடிச்சென்று ஊராரிடம் சொல்ல, அனைவருமாக சேர்ந்து புற்றை இடித்து அந்த சிவலிங்கத்தை மேலே கொண்டு ஸ்தாபித்து வழிபடவும் செய்தனர். இப்படி கோ (காமதேனு பசுவாக) வந்து பால் சுரந்த புற்றாதலால் ஊருக்கு கோவந்தபுற்றூர், கோசுரந்தபுற்றூர், கோகறந்தபுற்றூர் என்ற பெயர்கள் ஏற்பட்டன.. இதுவே காலப்போக்கில் மருவி கோவந்தபுத்தூரானது. அனைவரின் முயற்சியால் அந்த சிவலிங்கத்திற்கு கோவில் எழுப்பப்பட்டது. பின்னர் அக்கோவில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்த மன்னர் களால் படிப்படியாக புதுப்பிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kovendan2.jpg)
காலமும் கட்டுமானமும்
முற்காலத்தில் கோவில் கட்டுமானத்தை மேற்கொள்ளும்போது மண்ணைக் குழைத்து வைத்தே சுவர் எடுப்பித்தனர். பின்னர் அது மரங்கள்கொண்டு கட்டப்பட்டன. மூன்றாவது கட்டமாக மண்ணை சுட்டு செங்கற்களாக்கி சுண்ணாம்புக் கலந்து சிற்பசாஸ்திரத்தின்படி கட்டப்பட்டன. அடுத்த கட்டமே இன்றளவும் நீண்டு நிலைத்திருக்கும் விதமாக கட்டப்பட்டுவரும் கற்றளி எனப்படும் கருங்கல் கட்டுமானங்கள். கி.பி ஏழாம் நூற்றாண்டிலேயே இருந்துள்ள இவ்வாலயத்தை கி.பி. 929-ல் பராந்தக சோழன் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவை கலந்து சிற்ப சாஸ்திரப்படி கட்டி முடித்ததாகவும், அப்படி சுட்ட செங்கற்களைக்கொண்டு, சுண்ணாம்பு கலந்து சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட முதல் ஆலயம் இதுவே என்பதும் தலவரலாற்றில் இடம்பெற்றுள்ளது. கோவிலை கட்டி முடித்த மன்னன் தன் தாயின் பெயரில் வானவன்மாதேவி பட்டிணம் என்ற பெயரில் பிரம்மதேய குடியிருப்பு ஒன்றை தோற்றுவித்து ஆலயத்தை பராமரிக்கவும், பூஜைகள் செய்யவும் அந்தணர்களை குடியேற்றினான். அவனுக்குப் பின்னர் உத்தமசோழன் ஆட்சிக்காலத்தில் கி.பி. 970-ல் கருங்கல் கட்டுமானமாக இவ்வாலயம் மாற்றம் பெற்றது. உத்தமசோழனது அரசில் அதிகாரியாய் இருந்த அம்பலவன் பழுவூர்நக்கன் என்பவன் இப்பணியை பொறுப்பேற்று சிறப்பாக செய்து முடித்ததுடன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் ஆகியோருக்கான சந்நிதிகளை உருவாக்கி அவர்களது திருமேனிகளை பிரதிஷ்டை செய்தான்.
கல்வெட்டு செய்திகள்
ஆலயத்தின் பாண்டிய சோழ மற்றும் விஜயநகர மன்னர்கள் கால கல்வெட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மன், பரகேசரி உத்தமச் சோழன், முதலாம் ராஜராஜசோழன், முதலாம் ராஜேந்திரசோழன், முதலாம் குலோத்துங்கச் சோழன் ஆகியோரது கல்வெட்டுக்களுடன், விஜயநகர மன்னர்களின் கல்வெட்டு இங்கு இடம்பெற்றுள்ளன. கல்வெட்டுகளில் ஆறு பாண்டியர் காலத்தியவை. ஒன்று 1426--ஆம் ஆண்டில் ஆட்சிபுரிந்த விஜயநகர மன்னர் கம்பண்ணர் கால கல்வெட்டாகும். இக்கல்வெட்டில் விஜயமங்கலமுடைய மகாதேவர், விஜயமங்கலத்து மகாதேவர் மற்றும் விஜயமங்கலமுடைய பரமசாமி என இறைவனது திருப்பெயர்கள் குறிப்பிடப்பெற்றுள்ளது.
இவ்வூரில் திருத்தொண்டத் தொகையன் திருமடம் ஒன்று இருந்ததை திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜ தேவரின் 32-ஆவது ஆண்டு ஆட்சிக்கால கல்வெட்டு கூறுகின்றது. திருஞானசம்பந்தர் பாடிய, "வாழ்க அந்தணர் வாணவர் ஆயினும்' என்னும் பாடல் இக்கோவிலில் கி.பி. 1248-ல் எழுதப்பட்டுள்ள மூன்றாம் ராஜேந்திர சோழனுடைய தெற்கு பிராகாரத்திலுள்ள கல்வெட்டின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. பாடல்பெற்ற தலங்கள் பலவற்றிலும் பூஜையின்போது தேவாரம் ஓதப்பட்டன. அதுபோல இந்த கோவிந்தபுத்தூர் கோவிலிலும் தேவாரப் பதிகங்கள் ஓதப்பட்டதை கி.பி. 984-ல் வடிவக்கப்பட்ட உத்தமச் சோழரின் கல்வெட்டு கூறுகின்றது. இந்த திருமறை ஓதலுக்காக இவ்வூர் சபையினரால் நெல் வழங்கப்பட்டதை, முதலாம் ராஜராஜனின் கி.பி. 1014-ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கூறுகின்றது.
வழிபட்டோர் மற்றும் பாடியோர் கோ (பசு) மற்றும் பாண்டவ அர்ச்சுனன் ஆகியோரும் மற்றும் பல மன்னர்களும் இறையடியார்களும் இவ்வாலயத்தை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
திருநாவுக்கர் கொள்ளிடத்தின் தென்கரை விஜயமங்கையிலிருந்து இவ்வாலயத்தை நினைத்து ஒரு பதிகம் பாடியுள்ளார். (6-71-3).
ஆலய அமைப்பும் தரிசனமும்
இரண்டு பெரும் பிராகாரங்களுடன். நீள வாக்கீல் அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பு ராஜகோபுரமின்றி கல்ஹாரத்துடன் அமைந்துள்ளது. முகப்பின்மேல் தலவரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக பசு சிவலிங்கத்தின்மீது பால் சொரியும் அற்புதக்காட்சி சுதை சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முன்வாயில் வழியாக ஆலயத்தின் உள்ளே நுழைய முதலில் நம் கண்ணில்படுவது தென்முகம் நோக்கிய அம்பிகை சந்நதி. முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அம்சங்களுடன் அம்பிகை சந்நிதி அமையப் பெற்றுள்ளது. முன்மண்டபத்தை தாங்கி நிற்கும் சிங்கமுகத் தூண்கள் பல்லவர் சிற்பக்கலை நேர்த்தியை எடுத்தியம்புகின்றன. கருவறையில் நின்ற கோலத்தில் அழகுததும்பும் முகத்துடன் புன்னகை புத்தவளாய் சர்வமங்கலத்தையும் தருபவளாய் அம்பிகை அருள்பாலிக் கிறாள். அம்பாள் சந்நதிக்கு வலதுபுறத் தில் வசந்தமண்டபம் அமைந்துள்ளது. முதல்பிராகாரத்திலுள்ள வினாயகரையும் பலிபீடத்தையும், நந்தியம் பெருமானையும் தரிசித்து .இரண்டாம் வாயில் வழியாக உள்ளே செல்ல விசாலமான மகாமண்டபமும், அதனைத்தொடர்ந்து துவாரபாலகர்கள் காவல்புரியும் ஸ்தபன மண்டபமும் உள்ளது. அதில் மற்றொரு பலிபீடமும் நந்தியம் பெருமானும் வீற்றிருக்க தொடர்ந்து அந்தராளம் மற்றும் கருவறை இடம்பெற்றுள்ளது. கருவறைக்குள் கருணையே வடிவாக காட்சித்தந்து காண்பவரை கவர்ந்து அவர்கள் வேண்டுவதை வேண்டியபடி அருள்கிறார் ஸ்ரீகங்காஜடேசுவர். வழவழ லிங்கமாக சிறிய வடிவில் காட்சி அளித்தாலும் கீர்த்தியில் பெரியவராகவும், அருள்பாலிப்பதில் அளப்பரியவராகவும் திகழ்கிறார்.
அற்புதமான சிற்ப வேலைப்பாடு கள்கொண்ட கருவறை விமானம் காண்பவரை கவர்ந்திழுக்கிறது. ஒன்பது மாடங்களைக்கொண்ட இந்த விமானம் நவகோஷ்ட வகையை சேர்ந்ததாகும். ஒவ்வொரு மாடத்திலும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பசு சிவலிங்கத்தின்மீது பால் சொரியம் காட்சி, அர்சுனன் தவம் செய்யும் காட்சி, ஈசனுடன் அர்ச்சுனன் போர் புரியும் காட்சி, வேதியர்கள் ஈசனை வழிபடும் காட்சி போன்ற சிற்பங்கள் கவினுற வடிக்கப்பட்டுள்ளன. கருவறை கோட்டத்தில் தெற்கில் நர்த்தனகணபதி, தக்ஷ்ணாமூர்த்தி, மேற்கில் மகாவிஷ்ணு, வடக்கில் பிரம்மா, கொற்றவை, பிக்ஷாண்டவர், திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. பிராகாரச்சுற்றில் கிழக்கில் மடப்பள்ளியும், தெற்கு திருமாளப்பத்தியில் அம்பாள், தட்சிணாமூர்த்தி, இராஜராஜசோழன், வானவன்மாதேவி, கரிகால்சோழன், சம்பந்தர், மாவிஷ்ணு ஆகியோருடன் சப்தமாதர்கள் மற்றும் வினாயகர், நாகதேவதைகளின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. மேற்கு திருமாளப்பத்தியில் மோதககணபதி, சிருஷ்டிகணபதி, மகாலிங்கம், சோமாஸ்கந்தர், முருகப்பெருமான், காசிவிசுவநாதர், கஜலட்சுமி, தலவரலாற்றுச் சுதைசிற்பம், வள்ளி- தெய்வானை உடனுறை முருகப்பெருமான் தனிசந்நதிகள் அமைந்துள்ளன. வடக்கில் சண்டிகேசவரர் சந்நிதி, அவருக்கருகில் திருமஞ்சனக் கிணறும் இடம்பெற்றுள்ளன. மகாமண்டபத்தின் வடக்கில் ஆடல்வல்லானும், நவகிரக கோட்ட மும், கிழக்கில் பைரவர் மற்றும் சூரியனும் இடம்பெற்றுள்ளனர்.
ஆலயத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து இறைதிருமேனிகளும் காண்போரை வியக்கவைக்கும் அளவிற்கு கவினுற வடிக்கப் பட்டிருப்பதை காணக் கண்கோடி வேண்டும் என்று கூறினால் அது மிகையாகாது.
உற்சவங்களும் திருவிழாக்களும்
தினசரி சிவாகம முறையில் ஒருகால பூஜை நடத்தப்பெறுவதுடன், சிவாலயங்களுக்கே உரித்தான பட்ச மற்றும் மாதாந்திர உற்சவங்கள் நடைபெறுகின்றன. இதுத்தவிர பெருந்திருவிழாக்கள் ஏதும் நடைபெறுவதில்லை. கடைசியாக 45 ஆண்டுகளுக்குமுன் வருடாந்திர உற்சவம் எனப்படும் பெருந்திருவிழா நடைபெற்றுள்ளது. அதன்பிறகு நடத்தப்படவில்லை.
பிரார்த்தனையும் நேர்த்திக்கடனும்
முன்னோர் சாபம் உள்ளவர்கள், திருமணம் தடைப்படுபவர்கள், புத்திரபாக்கியம் இல்லாதோர் இவ்வாயலத்திற்கு வந்து வழிபட்டு பலன் பெறலாம்.
அமைவிடம்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுக்கு வடக்கில் அமைந்துள்ள இவ்வாலயத் திற்கு, அரியலூரிலிருந்து விளாங்குடி கைக்காட்டி, விக்கிரமங்கலம் முட்டுவாஞ்சேரி வழியாகவும், ஜெயங்கொண்டத்திலிருந்து தா.பழுர், காரைக்குறிச்சி வழியாகவும், கும்பகோணத்திலிருந்து நீலத்தநல்லூர், மதனத்தூர், காரைக்குறிச்சி, வழியாகவும் செல்லலாம். திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. தினசரி காலை 8.00 மணிமுதல் 10.00 மணிவரையிலும்; மாலை 6.00 மணிமுதல் இரவு 8-00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்ட வர்க்கும் இறைவா போற்றி!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-08/kovendan-t.jpg)